இருள் வலை - Dark web, the beauty of beast

தங்கம் முதல் தக்காளி வரை அனைத்து பொருட்களின் விலையை தெரிந்துக்கொள்ள, தெரியாத ஊருக்கு வழி கண்டுபிடிக்க, புதிய திரைப்படங்களின் விமர்சனங்களை பார்க்க, பழைய திரைப்படங்களை ரசிக்க, அருகிலுள்ள உணவகங்களை தேட என்று அனைத்திற்கும் நாம் பயன்படுத்துவது கூகுள்.காம்(google.com), facebook.com மற்றும் பல. அதில் தவறொன்றுமில்லை. ஆனால், google, facebook, போன்ற வலைதளங்கள் நீங்கள் என்ன தேடுகிறீர்கள்? எதற்காக தேடுகிறீர்கள், நீங்கள் தேடும் கருவி கைப்பேசியா? கணினியா? எந்த ஊரிலிருந்து தகவல் தேடப்படுகிறது? என்று பல விவரங்களை நமக்கு தெரியாமலேயே சேமிக்கிறது. 

உதாரணத்திற்கு, சுற்றுலா முடித்து ஆசையாக முகநூலில் பதிவிடும் உங்கள் புகைப்படத்தை வைத்தே, நீங்கள் சென்று வந்த இடத்தை முகநூல் தெரிந்துகொள்ளும். பின்னர், உங்கள் நண்பர்கள் பட்டியலிலுள்ள நபர்களுக்கு, நீங்கள் அனுபவித்த சுற்றுலா தலத்தை, பார்வையிட பரிந்துரைக்கும். இதில் முகநூலுக்கு என்ன லாபமென்றால், அந்த சுற்றுலா தலத்தை சுற்றியுள்ள தங்குமிடம், உணவிடங்களின் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் பணம் ஈட்டும். அதுமட்டுமல்ல, நாம் பார்க்கும் வெப்சைட்டில் google, facebookன் share பொத்தான் இருந்தால், நம்மை ஏதோ ஒரு வகையில் கூகுளும், ஃபேஸ்புக்கும் கண்காணிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (அதான் எங்கிட்ட facebook account இல்லயேனு மனசுக்குள்ள நினைச்சு சந்தோஷப்படுறவங்க, நிற்க! அங்கேயே நிற்க! உங்கள் விவரங்கள் அனைத்தையும் ghost profile என்னும் பெயர் தெரியா பெயரில் சேமித்துக் கொண்டிருக்கிறதாம் முகநூல்!!!!!). 

இதில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா???? இருக்கு!!! அதுதான் இந்த பதிவின் தலைப்பு, இருள்வலை (darkweb, darknet). இந்த இருள்வலையை பயன்படுத்தும்போது, நீங்க யாரு, என்ன தேடுறீங்க, எதுக்கு தேடுறீங்கனு மூக்கு கண்ணாடி போட்டு முக்கிட்டு பாத்தாலும் கண்டுபிடிக்க முடியாது. உங்கள பத்தின தகவல் யாருக்கும் கிடைக்காது. அப்படின்னா இருள்வலை எப்படி இருக்கும்? எனக்கே பார்க்கணும்போல இருக்கேனு மனசுக்குள்ள் தோனியிருக்கனுமே? அதுவும், google chrome மாதிரி ஒரு சாதாரண browser தான். அதன் பெயர் “TOR”, “தி ஆனியன் ரௌட்டர்”.



ஒன்னுத்துக்கும் ஆகாதவங்கள போடா வெங்காயம்னு நம்ம திட்டுவோமே, அந்த வெங்காயம் தான் “TOR” ப்ரௌசரின் லோகோ.  ஏன் வெங்காயத்தை வச்சாங்கனு தெரியுதா? ஏன்னா, வெங்காயத்த உரிக்க உரிக்க உள்ள எப்படி ஒன்னுமே இல்லாம போகுமோ, அது போல தான் TORஉம்.  ரூம் போட்டு, வலை போட்டு ஏன் மாஸ்க் போட்டு தேடுனா கூட, உங்கள பின் தொடருறவங்களால உங்கள கண்டுபிடிக்கவே முடியாது. எப்படி மூளையா யோசிச்சு செதுக்கிருக்காங்க லோகோவ. இந்த ப்ரௌசரை எப்படி இன்ஸ்டால் செய்வது, எப்படி பயன்படுத்துவது போன்ற தகவல்களை பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு, “டோர்” ப்ரௌசரின் எக்ஸ்ட்ரா சக்தி பற்றி பார்க்கலாம். 

ஒரு விஷயத்தை ஒருவருக்கு புரிய வைக்க முடியவில்லை என்றால், அந்த விஷயத்தை குழப்பி விடுவது எப்படியோ, அதைபோல தான் TORஉம். உங்களை யாரேனும் வலைதளத்தில் பின் தொடர நினைத்தால் அவர்களை குழப்பி, நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பதை மறைத்து விடும். TOR தனக்கென்று ஒரு நெட்வொர்க்கை வைத்துள்ளது. உதாரணத்திற்கு, நம்ம ஊரு தாதாக்கள், வெளியூருல யாரையாவது தடயம் இல்லாம போட்டு தள்ளனும்னு நினைச்சா, அந்த ஊர்ல உள்ள அவங்களுக்கு தெரிஞ்ச ரௌடி நெட்வொர்க்ல, ஒரு ரௌடியை தேர்ந்தெடுப்பார்கள். கொலை செய்தவருக்கும், செய்யப்பட்டவர்க்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் ஒரு மாயையை உருவாக்க தாதாக்கள் கடைபிடிக்கும் வழக்கம். கொஞ்சம் மிகைப்படுத்தி கூறினாலும், “டோர்”யின் செயல்பாடும் தாதாக்கள் போலவே!!! 

இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முதலில், இன்டர்நெட்டின் “ஐபி அட்ரஸ்” என்றால் என்ன என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு முகவரி இருப்பதுபோல, இன்டர்நெட்டை பயன்படுத்தும் ஒவ்வொரு கருவிக்கும் (மொபைல்போன், கணினி) கொடுக்கப்படும் முகவரிதான் “ஐபி அட்ரஸ்”. உதாரணத்திற்கு, நீங்கள் ஜியோ இன்டெர்நெட்டை பயன்படுத்துபவராக இருந்தால், “ஐபி அட்ரஸ்” யை ஜியோ உங்களுக்கு கொடுக்கும். உங்க “ஐபி அட்ரஸ்” என்னனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கா? உங்க மொபைல்ல https://whatismyipaddress.com/  டைப் செஞ்சு பாருங்க. My IP Address Is: 196.200.200.100 என்று ஒரு நம்பர் கோர்வை வரும், அது தான் உங்க “ஐபி அட்ரஸ்”.

‘பாம் செய்வது எப்படி’, ‘ஆளில்லாத வீட்டில் கொள்ளை அடிப்பது எப்படி’ னு யாரேனும் வலைதளத்தில் தேடினால், அவர்களை இந்த “ஐபி அட்ரஸ்”ன் மூலம் அரசு அடையாளம் கண்டுகொள்ளும். அண்மையில், சில தமிழ் திரைப்படங்கள், இரும்புத்திரை, கீ, அடங்கமறு, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால், திருட்டு பயலே 2, கணிதன்,  "ஐபி அட்ரஸ்" என்னும் வார்தையை பிரபலப்படுத்தியிருந்தாலும் பலருக்கு அது புரியாத புதிராகவே இருக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தில், ஆன்லைனில் பல லேப்டாப்கள் வாங்கி, அதன் பாகங்களை திருடி விற்ற பின்னர், லேப்டாப் சரியாக வேலை செய்யவில்லை என்று திருப்பி அனுப்பவது போல ஒரு காட்சி வரும். இந்த திருட்டை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி, ஆன்லைனில் ஆர்டர் செய்ய பயன்படுத்திய "ஐபி அட்ரசை" கண்டுபிடித்து ஆளை பிடிக்க முயற்சி செய்வார். ஆனால், தன்னுடைய அடையாளத்தை மறைக்க ரயில் நிலைய வை-ஃபை யை பயன்படுத்தியிருப்பது தெரிய வரும். இருள்வலையின் சாராம்சமும் "ஐபி அட்ரஸை" மறைப்பதை பற்றியதுதான்.

கீழே இருக்கிற படத்தை பார்த்தால் இன்னும் தெளிவாகும்.


1)    தேட நினைக்கும் வெப்சைட்டை, மொபைலில் அல்லது கணினியில் டைப் செய்தல்
2)    டைப் செய்த வெப்சைட், நமக்கு இன்டர்நெட் சேவையை தருபவரிடம் (ஜியோ, ஏர்டெல், ஐடியா..) செல்லும். இவர்கள் நம்முடைய “ஐபி அட்ரஸ்”ஐ சரி பார்ப்பது மட்டுமல்லாமல், நாம் யார் என்பதையும், என்ன தேடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்வார்கள்.
3)   கடைசியாக, நாம் எந்த வெப்சைட்டை தேடுகிறோமோ அங்கே அனுப்பி வைப்பார்கள்.

இப்போது “டோர்” எப்படி வேலை செய்யும் என்பதை பார்க்கலாம். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது  TOR நெட்வொர்க்.

கீழே இருக்கும் படத்தை பாருங்கள். 



TOR நெட்வொர்க் என்பது பல கணினிகள் (பச்சை நிறத்தில்) சேர்ந்த கூட்டமாக காட்டப்பட்டுள்ளது. படத்தில் இருப்பதுபோல், நடைமுறையில் கணினிகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்காது. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு இடங்களில் இருக்கும். பல கணினிகளுக்கிடையேயான இணைப்பு, TOR நெட்வொர்க்கை இயக்குகிறது.
TOR ப்ரௌசரில் நாம் தேடும் வெப்சைட், இன்டர்நெட் சேவையை தருபவரின் மூலம் TOR நெட்வொர்க்கை சென்றடையும். இங்க தான் ட்விஸ்டே!!! ஏற்கனவே பார்த்ததுபோல், TOR நெட்வொர்க் நாம் தேடும் வெப்சைட்டை நேரடியாக வெப்சைட் இருக்கும் இடத்திற்கு அனுப்பாது. TOR நெட்வொர்க்கில் குத்துமதிப்பாக மூன்று கணினிகளை தேர்ந்தெடுத்து அதன் வழியே நாம் தேடும் வெப்சைட்டுக்கு நம்மை அழைத்து செல்லும். மூன்று கணினிகள் மூலம் செல்வதால், உங்களை பின் தொடரும் நபருக்கு, யாரு என்ன தேடுறாங்கனு தெரியாமலே போய்விடும்.

எடுத்துக்காட்டாக, GOOGLE.COM என்று டைப் செய்து ஏதாவது ஒன்றை TOR பயன்படுத்தி தேடுகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். TOR முதலில், தன்னுடைய நெட்வொர்க்கில் இருக்கும் மூன்று கணினிகளை தேர்ந்தெடுக்கும். நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் இந்த கணினிகள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கலாம். உதாரணத்திற்கு, சீனாவில் ஒன்று, பிரான்சில் ஒன்று, ருசியாவில் ஒன்று இருப்பதாக வைத்துக்கொண்டோமானால், தேடப்படும் வெப்சைட் சீனா வழியாக பிரான்ஸ் சென்று, கடைசியாக ருசியாவிலிருந்து வெப்சைட்டை அடையும். இதனால் எங்கிருந்து யார் என்ன தேடுகிறார்கள் என்பதை “டோர்” மறைத்துவிடும். மேலும், தேடப்பட்ட வெப்சைட் கடைசியாக ருசியாவில் இருந்த கணினி மூலம் சென்றடைந்ததால், நம்மை தேடுபவர்களுக்கு ருசிய கணினியின் “ஐபி அட்ரஸ்” மட்டும்தான் கிடைக்கும்.

பல கணினிகள் வழியே செல்லும் நம் தேடலை, அந்த கணினிகளுக்கு சொந்தக்காரர்கள் பார்த்துவிட மாட்டார்களா? கிராமபுறங்களில், பால் வாங்கிய கணக்கை நேரடியாக, இத்தனை லிட்டர், என்று குறிக்காமல், சுவற்றில் “கோடுகள்” போட்டு வேற்று வடிவில் வைத்திருப்பார்கள். இப்படி வடிவம் மாற்றி வழங்குவதை தொழில்நுட்பத்தில் “என்க்ரிப்ஸன்” என்று சொல்வார்கள. நாம் தேடும் செய்திகளும், நேரடியாக செல்லாமல் வேற்று வடிவில் செல்வதால் யாராலும் நம் தேடலை பார்க்க இயலாது.

இப்படி யாருமே கண்டுபிடிக்க முடியாத TORஅ வச்சு என்ன என்ன வேல பண்ணிருக்காங்கனு வர போற பகுதில பார்ப்போம்…….!!!

இதை பயன்படுத்தி பல சுவாரசியமான வலைதள கொள்ளைகள் நடந்திருப்பதை பார்த்தால், தாவூத் இப்ராஹிம்லாம் சும்மானு தோனும். கஞ்சா வித்தாலே கைதுனு சொல்ற அரசாங்கத்தால, கேட்டமைன், ஹெராயின், கொக்கையின், ஓபியம் என்று பல போதை பொருட்களை வித்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்த கொள்ளையர்கள் தப்பிப்பதற்கும், இன்றளவும் நடந்துகொண்டிருக்கும் போதை பொருள் விற்பனையை தடுக்க முடியாமல் அரசு தவிப்பதற்கும், இந்த TOR தான் காரணம். ஆமா! TOR மூலமா போதை பொருள் ஆன்லைன்ல வாங்கினாலும், பணப் பரிவர்த்தனை செய்யுறப்போ சிக்கிக்குவாங்கலே? ஆன்லைன்ல ட்ரான்சாக்ஸன் பேங்க் மூலம் நடந்தாலோ, க்ரெடிட் கார்ட் பயன்படுத்தினாலோ தான் அரசு கண்டுபிடுச்சுரும்ல? பின்ன எப்படி?

BITCOIN, BLOCKCHAIN… என சில வார்த்தைகளை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். கேள்வி படாதவர்களும் இருக்கலாம். “பிட்காயின்”,  இதுக்கு பேங்குலாம் வேண்டாம், ஒருத்தர் மற்றொருவருக்கு நேரடியாக பணத்தை கொடுக்கலாம். வாவ்!!! வரும் பதிவில் சுவாரஸ்யமான வலைதள கொள்ளை சம்பவங்களோடு இதையும் சேர்த்து பார்க்கலாம். 

Comments

  1. https://www.torproject.org/download/

    மேல இருக்குற லிங்கிற்கு போங்க. அங்க விண்டோஸ், லினக்ஸ், அன்ட்ராய்ட்ற்கு தனித்தனியா "டோரை" பதிவிறக்க முடியும்.

    பிறகு எளிதாக சில கிளிக்கின் மூலம் இன்ஸ்டால் செய்யலாம். கொஞ்சம் ஸ்லோவா இருக்கும், ஆனால், 100% பாதுக்காப்பானது. உங்கள் அலுவலக கணினியில் இன்ஸ்டால் செய்யும் பட்சத்தில், அவர்கள் "டோரை" தடை செய்து வைத்திருந்தால், அவர்களின் அனுமதி இல்லாமல் வேலை செய்யாது.

    ReplyDelete
  2. migavum payanulla padhivu

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

அபுதாபி

Bengal Famine

கணக்கு தவறானால் கம்பி எண்ணுறது நிச்சயம் - Wrongly jailed for false probabilistic assumption

வைரஸின் கருணையால் நாம் வாழ்கிறோமா? - Better understanding of Life of Virus

தொற்று நோய்: விவசாய புரட்சியின் சாபமா? - 1918 Pandemic Disease Influenza

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

சில்க் ரோடு பகுதி -2- USE OF BITCOIN TOR IN SILKROAD

கொரோனா கவச் - Corona Kavach new App to check the safeness of places in India