அபுதாபி

 அபுதாபி



7 மாகாணங்களை உள்ளடக்கிய வளைகுடா நாடுகளில் சிறந்த நாடாக விளங்குவது ஐக்கிய அரபு அமீரகம். இதில் வெளி உலகத்திற்கு மிகவும் தெரிந்த மாகாணம், துபாய். அதை தவிர மீதி 6 மாகாணங்கள் அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்மு அல் குன், ரஸ் அல் கைமா மற்றும் புஜைரா. இதில் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம். அதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பாலைவனத்தை சோலைவனமாக மாற்றி பொருளாதாரம், கல்வி, மருத்துவம், கலை, பாதுகாப்பு என்று அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. உள்நாட்டு பாதுகாப்பில் உயர்தரமான கட்டமைப்பை கொண்டிருந்தாலும், ஐடி மற்றும் கல்வியில் அண்மையில்தான் வளர்ச்சியை காண தொடங்கியுள்ளது. ஏழு மாகாணமும் தனித்தனி ராஜாக்களால் ஆளப்படுகின்றன. ஒவ்வொரு மாகாணமும் தனக்கென்று தனி சட்டங்களை வைத்திருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு  மற்றும் தொலைத்தொடர்பு என்று சில துறைகள் எல்லா மாகாணத்திற்கும் பொதுவாகவே இருக்கிறது. புகையிலை மற்றும் மதுபானங்களை சில மாகாணங்கள் அனுமதிப்பதில்லை, சில அனுமதிக்கிறது. இதில் வளர்ந்த மாகாணமாக துபாய் தெரிந்தாலும், அபுதாபியின் அரசர் கை தான் பல விஷயங்களில் ஓங்கியிருக்கிறது. உலகத்தில் “முதன் முறை”,  “வேறு எங்கும் இல்லாத”, “வித்தியாசமான” என்ற வார்த்தைகள் துபாய் அரசுக்கு பிடித்த ஒன்று போலும். அதனால்தான் உலகின் மிக உயரமான கட்டிடம், ஆளில்லாத மெட்ரோ ரயில் சேவை என்று “உலகின் முதல்” என்ற பெயரை தனக்கு சொந்தமாக்கி உள்ளது. அதே நேரம் இவ்வாறு செய்ய முற்பட்டு பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதும் குறிப்பிடதக்கது. உலகின் உயரமான கட்டிடம் துபாயில் இருந்தாலும் அதன் பெரும் பங்கு அபுதாபி அரசரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. சுற்றுலாத்தலம் என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், என்பது மறுக்க முடியாதது. கேளிக்கைகள் மற்றும் இரவு வாழ்க்கை என்று துபாய் சற்று மேற்கு நாட்டின் நாகரீகத்தை பெரிதாக கொண்டுள்ளது. 

இங்கு, குடி பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் உள்நாட்டு மக்களை காண்பது சற்று அரிதாகவே படுகிறது. நாம் பார்க்கும் நான்கில் ஒருவர் இந்தியராக பாக்கிஸ்தானியராக பங்களாதேசியாகவோ தான் இருப்பார்கள். அடுத்து பிலிப்பினோ மற்றும் ஆப்பிரிக்கர்கள். பல லட்சங்கள் சம்பாதித்தாலும் வெளித்தோற்றத்தில் காண்பிக்காத தென்னாட்டு இந்தியர்கள் அதுவும் மலையாளிகளே அதிகம். முழு சம்பாத்தியத்தையும் தன் நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் இந்தியர்களுக்கு முதலிடம். பின் பாகிஸ்தானியர்கள், ஆப்பிரிக்கர்கள், பங்களாதேஷிகள். பிலிப்பினோக்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர்கள். பெரும்பாலானவர்களிடம் ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் வாட்ச் களை பார்க்க முடியும். இவர்கள் பெரும்பாலும் முகம் சுளிக்காமல் வாடிக்கையாளர்களை நடத்தும் பொறுமை இருப்பதால் என்னவோ, பெரும்பாலும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் இடத்தில், அது எந்த நிறுவனமாக இருந்தாலும், இருப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு, இங்கு பெரிய வணிக வளாகங்களில் ஒன்று, லுலு மால். அங்கு பில்லிங் செக்ஷனில் பெரும்பாலும் பிலிப்பினோக்களை காணலாம். ஹலோ சார், ஹொவ் ஆர் யூ சார் என்று பொய் சிரிப்பாக இருந்தாலும் பார்ப்பவர்கள் நம்பும் அளவிற்கு அதில் நிஜத்தை வைத்துப் பேசுவார்கள்.


என்னதான் சோலைவனமாக மாறி இருந்தாலும், பாலைவனமாக இருந்த தனது சுயரூபத்தை அவ்வப்போது காண்பிப்பது உண்டு. மணற்புயல், வெயிலின் தாக்கம், ஹுமிடிடி என்று பல இயற்கை சீற்றங்களை இன்றளவும் நம்மால் காண முடியும். 


டிராபிக் விதிகள் சற்று கடினமாகவே உள்ளது. சாலையைக் கடப்பதற்கு ஒவ்வொரு இடங்களிலும் ஜீப்ர கிராசிங் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் அதை கடந்து செல்ல சில இடங்களில் டிராபிக் லைட் இருப்பதை பார்க்க முடியும், சில இடங்களில் இருப்பதில்லை. அவ்வாறு இருக்கும் இடங்களில் நடந்து செல்பவர்கள் கடக்க முற்படும் போது எந்த வாகனமாக இருந்தாலும் நடந்து செல்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கடந்து சென்ற பின்புதான் வாகனங்களில் செல்பவர்கள் தனது பயணத்தை தொடரலாம். இதை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. தண்டனை என்றால் அபராதம் தான், மிக அதிகமான அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்து அபுதாபியில் அல்லது துபாயில் ஓட்டுனர் லைசென்ஸ், வாகன ஓட்டுவதற்கான உரிமம் வாங்குவது அத்தனை எளிதல்ல. அதற்கான கட்டணமும் அதிகம். நமது இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவாகிறது. அதற்கடுத்து ரெட் சிக்னலை கடந்து செல்பவர்களுக்கு மிகவும் அதிகமான அபராதம் விதிக்கப்படுகிறது. இங்கு சிக்னலில் பச்சை விளக்கு இருக்கும்போது கடந்து செல்லலாம், அதே சமயம் பச்சை விளக்கு மிளிரும் போதே வாகனங்கள் நின்று விடுகிறது. பின்னர் மஞ்சள் விளக்கு வந்து அதற்குப்பின் சிவப்பு விளக்கு வருகிறது. 


காய்கறிகள், துணிமணிகள், மசாலா சாமான்கள் என்று பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. காய்கறிகள், இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் பக்கத்து நாடான ஓமானில் இருந்தும் வருகிறது. துணிமணிகள் பெரும்பாலும் பங்களாதேஷில் இருந்து வருகிறது, இங்கு பெரிய சந்தையாக “மீனா” மார்க்கெட் உள்ளது. அங்கு அனைத்து விதமான காய்கறிகளும் மீன் வகைகளும் கிடைக்கின்றன. மீனை வாங்கி அங்கேயே கழுவி சுடச்சுட அங்கேயே ப்ரை செய்து வீட்டுக்கு பொரிச்ச மீனோட வந்துடலாம். 


அடுத்து, சிங்கள் மதர். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் இல்லாமல் குழந்தையோடு தனி அம்மாவாக இங்கு வாழ்வதற்கு அனுமதி கிடையாது. அது தண்டனைக்குரியது. ஆனால் போன வருடத்திலிருந்து அது தளர்த்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. லிவிங் ரெலேஷன்ஷிப் இங்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகாமல் வசித்து வருவதை யாரேனும் போலீஸிடம் புகார் கூறினால், அவர்கள் உங்கள் மேல் ஆக்ஷன் எடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 


பலசரக்கு கடைகள் என்று சிறு கடைகளை பார்க்க முடிகிறது. இங்கு இருக்கும் அனைத்து பலசரக்கு கடைகளுக்கும் ஒரே பெயர்தான் “பக்காலா”. தனிப் பெயர்கள் எதுவும் கிடையாது. 

அடுத்து, தெருக்களிலும் கார்களின் கண்ணாடி இடுக்குகளிலும் மசாஜ் சென்டரின் விசிட்டிங் கார்டுகளை, ஒரு பெண்ணின் உருவத்தை போட்டு சற்று அரைகுறை ஆடையுடன் இங்கு மசாஜ் செய்யப்படும், பார்க்க முடியும். இத்தனை கடினமான சட்டங்களை கொண்டு இருந்தாலும் இத்தகைய செயல்களை ஏன் அனுமதிக்கிறது இந்த அரசு என்பது கேள்விக்குறியே!! எங்கு பார்த்தாலும் மசாஜ் சென்டர்கள் எங்கு பார்த்தாலும் ஸ்பா சென்டர் என்று சிட்டியின் உள்ளே சென்றால் தெருக்கள், சாலைகள் என்று மசாஜ் சென்டரின் விளம்பர காடுகள், விசிட்டிங் கார்டுகள் பரவிக் கிடக்கும்.


அடுத்து பார்க்கிங். இங்கு நாம் நினைப்பது போல் எங்கு வேண்டுமானாலும் கார்களை நிறுத்தி விட முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு இடத்திலும், நீலம் மற்றும் வெள்ளை அல்லது நீலம் மற்றும் கருப்பு அல்லது நீளம் மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களைக் பூசி வைத்திருப்பார்கள். வெள்ளையும் நீலமும் இருந்தால் அதை பிரிமியர் பார்க்கிங் என்றும் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு 3 திரம்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் கரன்சி பெயர், சராசரியாக 60 ரூபாய்க்கு சமம். நீளமும் கருப்பும் அடித்து வைத்திருந்தால் அதை ஸ்டாண்டட் பார்க்கிங் அதற்கு இரண்டு திரம்ஸ், ஒரு மணி நேரத்திற்கு, அதாவது சராசரியாக 40 ரூபாய், மஞ்சளும் வெள்ளையும் அடித்து வைத்திருந்தால் அங்கு நிறுத்தக் கூடாது.


இதுபோக பார்க்கிங் இடத்தில் மாற்று திறனாளிகளுக்கான தனி பார்க்கிங் ஏரியாவும், சிவப்பு கிராஸ் போட்ட பார்க்கிங் ஏரியாவும் இருக்கும். இதில் சிவப்பு கிராஸ் எதற்கென்றால் எமர்ஜென்சி நேரத்தில், அதாவது தீ பற்றிக் கொண்டால் தீயணைப்பு வாகனங்கள் வந்து நிறுத்துவதற்கும், அல்லது ஏதேனும் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வந்தால் நிறுத்துவதற்கும். 


அடுத்து வீசா. நாட்டினுள் நுழைவதற்கான விசா கட்டணம் சற்று அதிகம் தான். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் ரெசிடென்சியல் வாங்குவதற்கோ, அரசு அலுவல் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் இருக்கும் டாக்குமெண்ட்ஸ் அரேபிய மொழியில் மொழி பெயர்த்தல் வேண்டும். இதற்காக மூலை முடுக்குகள் எல்லாம் டைபிங் சென்டர் என்ற பெயரில் பல சிறு நிறுவனங்கள் இயங்குவதை பார்க்கலாம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் வாங்குகிறார்கள். குறைந்தது 1000 ரூபாய்.


அதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவுக்கும் இங்கேயும் எந்த வேறுபாடும் இல்லை. ஒரு சிலிண்டரின் விலை சராசரியாக 760 ரூபாய். அதையும் நாம் சென்று தான் எடுக்க வேண்டும். சிலிண்டர்கள் பெட்ரோல் பங்குகளில் கிடைக்கும். அதே சமயம் வீட்டில் வந்து சிலிண்டரை போடுவதாக இருந்தால் நமது நாட்டை விட இங்கு அதிகம், 1100 ரூபாய். என்னதான் எண்ணெய் கிடங்கு வைத்திருந்தாலும் இங்கும் அதே விலை தான்!! அதேபோல் பெட்ரோல் டீசல் விலை கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்தியாவில் எப்படி ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டு இருந்ததோ அதே போல் இங்கேயும் உயர்ந்து கொண்டுதான் இருந்தது. இதுபோக, வீட்டில் பைப் லைன் வழியாக கேஸ் வேண்டும் என்றால் அதற்கு கட்டவேண்டிய கட்டணமும் அதிகம் தான்.


அடுத்து செல்போன். நம்ம ஊர்ல 400 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இங்க 3000 ரூபா மாசம் போஸ்ட்பெய்டு, ஆனா 4 ஜிபி.. ஒரு நாளைக்கு இல்லைங்க ஒரு மாசத்துக்கு. செல்போன் பொறுத்தமட்டில் மிக அதிகம், அனேகமாக உலகத்திலேயே இந்தியாவில் தான் குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்.


அடுத்து வீட்டு வாடகை.. மிக அதிகம். ஒரு வீட்டினுள் இரண்டு மூன்று குடும்பங்கள் வசிப்பதும், ஒரு ரூம் எடுத்து அதில் பல பேர் பகிர்ந்து தங்கியிருப்பது இங்கு மிக சகஜம். ஒரு ரூம் அட்டாச் பாத்ரூம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பிற்கு இங்கு வாடகை இருக்கிறது. 


லோக்கல் ட்ரான்ஸ்போர்ட்.. ஹூண்டாய் நிறுவனத்தின் பேருந்துகளும் பென்ஸ் நிறுவனத்தின் பேருந்துகளும் இருப்பதைப் பார்க்கலாம். எல்லா வெளிநாடுகளை போன்று இங்கும் ஓட்டுநர்கள் மட்டுமே. எந்த பேருந்தில் ஏறினாலும் பயணிப்பதற்கான கார்டை (கிலாபத் என்று சொல்கிறார்கள்) கதவு பக்கம் இருக்கும் இயந்திரத்தில் மெதுவாக தட்டிவிட்டு, ஏறும் போது ஒரு முறையும் இறங்கும்போது ஒரு முறையும், பயணம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் யாரும் உங்களை கேட்க மாட்டார்கள், ஆனால் அவ்வப்போது செக்கிங் வருவது வழக்கம்


மிகப் பெரிய மசூதி, கிராண்ட் மாஸ்க் என்று கூறுகிறார்கள், அனேகமாக கொள்ளளவில் மெக்காவை விட பெரியதாக கருதப்படுகிறது. இன்றைய மதிப்பு 4 ஆயிரம் கோடிகள் செலவழித்து கட்டப்பட்டுள்ள மசூதி 2007களில் திறக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.


எத்தனை வளரும் நாடாக இருந்தாலும், அபுதாபியின் பேருந்து நிலையம், மெயின் பஸ் ஸ்டேஷனுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் அதாவது பட்டான் என்று சொல்கிறார்கள், நின்று கொண்டு துபாய் துபாய் துபாய், ஆலைன் என்று கூறிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். தங்களது சொந்த வாகனத்தை பயன்படுத்தி 3 அல்லது 4 பேர்களை இவ்வாறு கொண்டு சேர்ப்பதால் கிடைக்கும் லாபத்தை வைத்து அவர்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். சட்டப்படி குற்றம்தான், தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும் அவர்கள் அதை துணிந்து செய்வதை பார்க்கலாம். இப்படி செய்வதை ரோந்து பணிகளில் இருக்கும் சிஐடி கள் பார்த்தால் கடுமையான தண்டனை விதிக்கிறார்கள். சிஐடிக்கள், வாகனங்கள் சரியாக ஓட்டாமல், வாகன விதிகளை சரியாக கடைபிடிக்காமல் அல்லது சைக்கிள்கள் போகும் பாதைகளில் நடந்து சென்றாலோ அல்லது நடந்து செல்லும் பாதைகளில் சைக்கிளில் சென்றால் அபராதம் விதிக்கிறார்கள். அடிக்கடி இது நடக்காமல் இருந்தாலும் இத்தகைய விதிகள் இங்கு நடைமுறையில் இருப்பது என்பது உண்மை. அவ்வப்போது நமது லக்கு சரி என்றால் அந்த அபராதம் நமக்கு வந்து சேரும் என்பதில் ஐயமில்லை.


இங்கு பெண்களுக்கு முன்னுரிமை… பல இடங்களில் நாம் பார்க்கலாம், அது அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் சரி, மால் பார்க்கிங் ஏரியாவாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு தனி முன்னுரிமை உள்ளது. அரசாங்க அலுவலகங்களில் குடும்பமாக சென்றால் அவர்களுக்கு தனி முன்னுரிமை, அல்லது தனி வரிசையே உள்ளது. அதை போல் கடற்கரை சென்றாலும் சில பகுதிகள் குடும்பங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது, அங்கு பிரம்மச்சாரியாக செல்லும் நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், குடும்பங்களாக செல்லும்போது அங்கு சென்று கடற்கரையை என்ஜாய் செய்து விட்டு வரலாம்.


நமது தீபாவளி பொங்கலை போல் இங்கு பெரிதாக கொண்டாடப்படும் இரண்டு பண்டிகைகள் ஈத் பண்டிகை தான். அதிலும் ரம்ஜான் மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த மாதத்தில் வேலை செய்யும் பணி நேரம் கூட ஒவ்வொரு அலுவலகங்களிலும் குறைக்கப்படுகிறது, ஏனென்றால் அனைவரும் நோன்பு கடைபிடிப்பதால். காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் இரண்டரை மணி வரைதான் வேலை நேரம், அதாவது ஐந்தரை மணி நேரங்கள் மட்டுமே. அதைப் போல் இங்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ஆக இருந்தது, ஆனால் இப்போது அது மாற்றப்பட்டு வெள்ளிக்கிழமை, அரசு அலுவலகங்களில் 8:30 முதல் மதியம் ஒரு மணி வரை என்று அரை நாள் இருக்கிறது, சனி ஞாயிறுகளில் இங்கு எல்லா நாடுகளை போல விடுமுறைதான், தனியார் நிறுவனங்களுக்கு அல்ல!!. 


மதம், கடுமை அல்ல. ரம்ஜான் மாதத்தில், அவர்களோடு நாமும் நோன்பு கடைபிடிப்பது போல் தோன்றும்… மொத்தத்தில், மிக அழகிய நாடு. 





Comments

  1. Romba nalla irunthathu oru tour ponamari.. waiting for the next publish!

    ReplyDelete
  2. Overview on a country's culture and lifestyle of people who you saw. Good one. Keep it up. But still missing your old touch of magical words., It may because of multiple things has to get covered.

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

நைட்

The Sixth Extinction: An Unnatural History

இருள் வலை - Dark web, the beauty of beast

Sapiens: A Brief History of Humankind

The Diary of Anne Frank

schindler's list

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2