லாக்டவுன் குமுறல்கள்

கடந்த மூன்று மாதங்களில் பல சம்பவங்கள் புதிது புதிதாக நடந்து விட்டன. நடந்து கொண்டிருக்கின்றன.



கொரோனா முதல் நெய்வேலி எரிவாயு நிலைய வெடிப்பு வரை அனைத்தும் அடுத்து அடுத்தாற் போல. இடைப்பட்ட காலங்களில் இன்னும் நிறைய. மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்துவதற்குள் ஆசனவாய் மரணம். வருடங்கள் கடந்த பின்னும், இன்னும் ஆசிபாவின் மரணத்தை மறக்க மறுக்கும் மனதை ரணமாக்கும் விதத்தில், இன்றும் தமிழகத்தில் சின்னஞ்சிறுசுகளின் சிறகுகள் அடித்து நொறுக்கபட்டு பிணமாக்கப்பட்டிருக்கிறது.

பக்கத்து மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இது போன்ற ஒரு மரண வீட்டின் ஓலம் கேட்டு, இனி இப்படி ஒரு அவலம் நடப்பின், எண்ணி 21ஆம் நாளில் சிறுமியை சிதைத்த அந்த சவத்தின் சிரம் தூக்கிலிடப்பட்டு வீழ்த்தப்படும் என்று ஆணையிட்டார். ஆனால்நம் மாநில முதல்வர் காதுகளில் நடந்த ஓலம் விழாததற்கு காரணம் போட்டிருந்த மாஸ்க் தான் என்று நாளை செய்தி வந்தாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கில்லை. அதை, ஆம் என்று வாதாட அரசு வக்கீலைக் கூட இந்நேரம் அப்பாய்ண்ட் செய்திருப்பார்கள்.



கொரோனாவின் தொடக்கத்தில் கையெடுத்து கும்பிட்டு மக்களை வீட்டிலிருக்க பணித்த காவலருக்கிடையில்ஜார்ஜ் ப்லொய்ட் முதல் ஜெயராஜ் பெனிக்ஸ் வரை, காரணமே இல்லாமல் கொலை செய்ய கூட கூசாத கொடுங் காட்டு மிராண்டிகளும் இருக்கிறார்கள். இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  தப்பி ஓட முயற்சி செய்தும், பிடித்து பிடிவாரண்டில் போடப்பட்ட ஆய்வாளரை பார்த்த பின்னர் கொஞ்சம் அடங்கியிருப்பார்கள் என்று நம்பியிருப்போம்.

ஒரு பக்கம் "அரசாங்க வருமானம் குறைந்து வருவதை கண்டித்து, மதுக்கடைகள் திறப்பு" என்று மக்களுக்கு ஊத்தி கொடுக்க துணிந்த அரசு, மறுபக்கம், தனிமனித வருமானத்திற்கு போராடியவனை, தூக்கி கொண்டு போய் கொன்று திருப்பிக் கொடுக்கவும் துணிகிறது. அதை மறுநாளே, லாக்கப் மரணம் இல்லை என்று, 30 நாளுக்கு கூட மதுக்கடைகள் மூடாத முதல்வர் டிவிக்கள் முன் மனு கொடுக்கிறார். 
 
60 வருடங்கள் முன்னரே பிராண்டிங் என்ற மார்க்கெட்டிங் வித்தையை, அலேக்காக அமல்படுத்திய பக்கத்து வீட்டு அல்வா கடைக்காரர் இன்று இல்லை. அப்போது பிராண்டிங் என்றால் அரசு விற்கும் பிராந்தியின் ஒரு வகை போல என்று வேண்டுமானால் நினைத்திருப்பாரே தவிர, அது ஒரு வியாபார சூத்திரம் என்பதை நிச்சயம் அறிந்திருக்க மாட்டார் ஹரி சிங் அண்ணாச்சி. இரண்டு வருடங்கள் முன்னர், மூன்று 'மூன்று தலைமுறை' உயிர்களை விபத்தில் பலி கொடுத்த சோகத்தின் நடுவிலும், ஒரு வாரம் மட்டுமே கடைக்கு விடுமுறை விடுத்திருந்தார்.

விசாகப்பட்டினத்தில் பக்கத்து நாட்டவருக்கு சொந்தமான தனியார் எரிவாயு நிலைய விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை என்னவோ சொற்பம் தான் என்று சந்தோஷப்பட்டாலும், அதன் பாதிப்பு விட்டுச் செல்லும் எச்சம் என்னவோ சற்று காரமானதுதான். அவர்களின் 20 வருடங்களாக சரியாக பராமரிக்கப்படாத நிர்வாகக் குறைவு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், 20 டிகிரிக்கு குறைவாக பராமரிக்கப்படாத மனிதப்பிழை என்று பல காரணங்கள் கூறினாலும், 84ல் நடந்த போபால் விசவாயு கசிவை நினைவுப்படுத்தாமல் இல்லை. போபால் விசவாயு கசிவில் இருந்து உயிர்ப்பிழைத்த சொற்ப மக்களில் சிலர், கொரோனாவிற்கு இலகுவாக இரையாகிவிட்டனர் போலும். சம்பவம் நடந்த போது இறந்தவர்கள் போக, இன்று வரை இறந்து கொண்டிருக்கிறார்கள் அதன் தாக்கத்தால். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை உடனே தாக்கிவிடும் கொரோனா, போபால் விச வாயுவில் தப்பித்தவர்களை விட்டு வைக்காததில் ஆச்சர்யமில்லை. நோயான கொரோனா என்னவோ லாக் டவுன் அறிவித்து மாசுபட்ட காற்றை சுத்தப்படுத்தும் வேலையை எளிதாக செய்து முடித்து விட்டது என்பது ஒரு வரி உண்மை.

மனிதர்கள் செய்யும் அக்கிரமம் ஒரு பக்கம் இருக்க, வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் வேறு மறுபக்கம் விவசாயிகளை பதறி பதறி இருக்க வைத்து விட்டது இரண்டு மாதங்களாக. 10 வருடங்களாக வளரும் தென்னை மரங்களை, இந்தக் கூட்டம் 10 நிமிடங்கள் சுற்றி வந்தால் போதும், மரத்தில் இருக்கும் பச்சை அத்தனையையும் உரித்து எடுத்து விடுமாம். வட நாட்டில் மழை பொய்க்காத காரணங்களினாலும்தண்ணீர் வரத்து நதிகளில் எந்நேரமும் இருப்பதாலும், விவசாயம் இன்னும் செழிப்பாகவே இருந்து வருகிறது, நிச்சயம் தென் மாநிலத்தவர்கள் அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு. தென்னை மரத்தையே விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள், பச்சைப் பசேலென வளர்ந்து நின்ற பச்சைப் பயிர்களை மிச்சம் இல்லாமல் மேய்ந்து விட்டது வட நாட்டில்.  மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இதன் கூட்டம் ஒன்று, இந்தியாவிலிருந்து கிளம்பாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

வெட்டுக்கிளிகள் தன் வயிற்றுப்பசி போக்க கண்டம் விட்டு பறந்தது போல், மற்றொரு கூட்டம் ஒன்று பல மாநிலங்கள் கடந்து சாரையாக சாரையாக கடந்து சென்றது. கால் வயிறு கூட நிரப்ப வழியில்லாததால், கால் கடுக்க நடக்க துணிந்திருந்தது, கீழ்தட்டு மக்கள் என சமுதாயத்தால் தரம் பிரிக்கப்பட்ட அந்த கூட்டம். கொடுமையான நடைபயணத்தில் நடந்த அசம்பாவிதங்கள் ஏராளம்.  சொந்த ஊர் சென்று விடலாம் என நடக்கத் தொடங்கிய பெற்றோர் வழியில் விபத்தில் இறந்தது தெரியாமல் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர் நடுரோட்டில். பயண அசதி மற்றும் பசியின் மிகுதியில், ரயில் வராது என நினைத்து தண்டவாளத்தில் தலை வைத்து உறங்கியவர்கள் திரும்ப எழும்பவே இல்லை. பத்து நிமிட இடைவெளியில் சிறுத்தையிடம் தப்பியவர்கள், தன் தகப்பனை சைக்கிள் மிதித்து சொந்த ஊரான பீஹார் வரை அழைத்துச் சென்ற பெண், அவள் ஊரிலேயே கற்பழிக்கப்பட்டு இறந்தது, இவர்களின் பசி அவலம் பார்த்த அரசாங்கம், அதைப் போக்க, பார்த்துட்டே சாப்பிட்டால் கூட நாலே நாளில் காலியாகும் அளவுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான பருப்பு கொடுத்தது என நடந்த அசம்பாவிதங்கள் ஏராளம். கால்கள் புண்ணாகும் அளவுக்கு நடந்த மக்களின் துயர் போக்கி ஒரு நேர சாப்பாடு கூட போட முடியாத அரசாங்கம், சில லட்சங்கள் செலவு செய்து ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவி வருடி விட்டது நிச்சயம் ஆறுதலாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

கொரோனாவின் தொடக்கத்தில், பெரியம்மை தடுப்பின் போது இந்தியா சிறப்பாக செயல்பட்ட...........தாக  ஐ.நா(UNO) சபை, கூறிய செய்தியை  வாசிக்கும் போது மொத்த கிளாஸ் ரூமில் திடீரென்று ஒருவரை எழுப்பி பாராட்டுவதும், அந்த ஒருவராக நானே இருப்பது போன்ற பூரிப்பு தந்தது. மூன்று மாதம் கடந்து, கொஞ்சம் போல இருக்கும் அந்த பூரிப்பின் மிச்சமும், கொரோனா கவுண்ட்டில் ருசியாவை முந்திக் கொண்டு 3ஆவது இடத்துக்கு போன போது, சுக்கு நூறாக சிதறி விட்டது. தமிழ்நாடு தன் பங்குக்கு, ஒரு நாட்டைப் பின்பற்றியே அதன் மாநிலமும் என்பது போல், மாநிலத்தில் 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த லாக்டவுனில் நடந்த ஒரு விஷயம் (நிச்சயம் நல்ல விசயம் அல்ல), 5 இங்கிலீஸ் வார்த்தைகளை கற்றுக் கொண்டது தான். LOCKDOWN, QUARANTINE, OUTBREAK, LOCK-UP MURDER, NEPOTISM......... 5 வார்த்தையுமே கத்துக்க வேண்டாத வார்த்தை தான், அதுலயும் முக்கியமா, நாலாவது வார்த்தை கற்று கொள்ள நிர்பந்திக்கப்பட்டுவிட்டோம், தமிழக போலீஸால்.

அனாவசியமாக வெளியில் திரிபவர்களை, மாஸ்க் போடாதவர்களை மிரட்டி பார்த்தார்கள், அடித்து பார்த்தார்கள், ட்ரோன் துணை கொண்டு வேவு பார்த்து விரட்டினார்கள்சில போலிசார் கெஞ்சவும் செய்தார்கள். எதற்கும் அசையவில்லை நம் மக்கள். இப்போது போபால் அரசு அதிரடி நடவடிக்கையாக, மாஸ்க் போடாதவர்கள், இனி, கொரோனா வாலுண்டியர்களாக நியமிக்கப்படுவார்கள் என ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. வேடிக்கையாக இருந்தாலும், இயல்பாக மனிதர்களுக்குள் காட்டப்பட வேண்டிய மனிதம் கட்டாயமாக்கப்பட வேண்டியிருப்பது வேதனையளிக்கிறது. இந்த நேரத்தில் யார் மனிதாபிமானம் பற்றி யோசிக்க முடியும் என்று பேசுபவர்கள் மாஸ்க் அணிந்து செல்லவும், அவசியமில்லாமல் வெளியில் செல்வதைப் பற்றியும் யோசித்திருக்க வேண்டும்.

அது சரி, மனிதர்கள் மனிதாபிமானம் உடையவர்களாக இருந்திருந்தால், அது ஏன் ஒரு கர்ப்பிணி யானையை வெடி வைத்து, துடிக்க துடிக்க சாகடிக்கப் போகிறோம். செய்தவர்களால் இக்கணம் வரை நிம்மதியாக வாழ முடிகிறதென்றால், அவன் மனிதனே அல்ல மிருகம், என்று வசை பாடிய பின்னர் தான், கலாநிதி மாறன் அவர்கள் "நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் போல் நடத்தப்பட்டோம்" என்று உளறிவிட்டு மன்னிப்பு கேட்டது, நியாபகத்திற்கு வந்தது. கொரோனாவிடம் பிடித்த ஒன்று, அது சமத்துவம் கடைப்பிடிப்பது. ஆனால் இதையும் "மனித அபிமானம்" வார்த்தைக்கான வடிவம் எந்த வகையில் நியாயம்? புதிதாக தலைப்பு கிடைத்து விட்டது என நான்கு செலிப்ரிட்டிகளை  அழைத்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பட்டிமன்றம் நடத்தி காசு பார்க்க தொடங்கியிருக்கும் ஊடகக் கூட்டம்.

இந்த லாக்டவுனில் நிகழ்ந்த டிப்ரஷன் மரணம் பற்றி பேசாமல் கடந்து விடுவது அவ்வளவு நியாயமானதல்ல. சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று நம்முடன் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ, அவர் நடித்ததில் பார்த்த கடைசி படத்தில், துவண்டு போய் தற்கொலை செய்த தன் மகனை மீட்கும் தந்தையாக நடித்திருந்தார். அவர் தெரிந்துதான் நடித்தாரா என்பது தெரியவில்லை. அதனாலேயே பல பேரின் மனதிலிருந்து, மேலும் மீள முடியவில்லை. கண்டிப்பாக லாக்டவுன் டிப்ரஷன் போக்க பார்த்த படங்களுள் ஒன்றாக, பல பேரின் தேர்வு இந்த படமாக இருந்திருக்கும். யாராவது ஒருவர் அவரோடு தற்செயலாக பேசியிருந்தால், இருந்திருந்தால், இன்று இருந்திருக்கலாம் அவரும் உயிரோடு. இனியாவது மனிதம் வளர்ப்போம்!!!

மனிதம் வளர்க்க போராட வேண்டிய சூழலில், சொந்த மகளையும், மகள் மணம் செய்த வேற்று ஜாதி ஆண்மகனையும் கௌரவக்கொலை செய்யத் தயங்காத பெற்றோர் விடுதலை என தீர்ப்பளித்த நீதிமன்றம், என்ன நீதியை நமக்கு கற்றுக் கொடுக்க விளைகிறது என்பது புரியாத புதிரே! 

இந்த கொரோனாவின் கொடூரத்திலும்,
அடுத்த வீட்டக்காரர் இறந்ததை எட்டிப் போய் பார்க்க முடியாத சூழ்நிலையிலும்,

கூடவே இருந்த ஒருவரின் உடல் அனாதையாக அடக்கம் செய்யும் அவலம் புரிந்தும்,

அபார்ட்மண்ட் கதவு திறக்க பல முறை யோசிக்க வேண்டியிருந்தும்,

கொரோனாவுக்கு காற்றில் பரவும் சக்தி இருப்பது தெரிந்தும்,

அரசின் துணையோடு கொரோனாவோடு வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம்.

ஆதலால், தமிழர்கள் கபசுர நீர்க் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். (அடுத்தவனுக்கு சொன்னா, அதெல்லாம் ப்ரூவ் ஆகலன்னு ஆயிரம் வியாக்கியானம் பேசுவான். நீங்கள்லாம் டாபர் ச்யவன்ப்ராஷ் சாப்பிடுங்க. அடுத்தவங்க நம்பிக்கைய நாராசமா பேசுற கூட்டம் நாங்க இல்ல)


Comments

Post a Comment

பிரபலமான பதிவுகள்

“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

அபுதாபி

Bengal Famine

கணக்கு தவறானால் கம்பி எண்ணுறது நிச்சயம் - Wrongly jailed for false probabilistic assumption

வைரஸின் கருணையால் நாம் வாழ்கிறோமா? - Better understanding of Life of Virus

தொற்று நோய்: விவசாய புரட்சியின் சாபமா? - 1918 Pandemic Disease Influenza

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

சில்க் ரோடு பகுதி -2- USE OF BITCOIN TOR IN SILKROAD

கொரோனா கவச் - Corona Kavach new App to check the safeness of places in India